மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்களுக்கு பொது வணிக முத்திரை: உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தொடர்பாக பயிற்சி அளிக்க நடவடிக்கை

மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்களுக்கு பொது வணிக முத்திரை: உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தொடர்பாக பயிற்சி அளிக்க நடவடிக்கை
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் மதிப்பு கூட்டப்பட்ட விவசாய விளைபொருட்களுக்கு பொதுவான வணிக முத்திரையை உருவாக்கும் பணியில் வேளாண் விற்பனைத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

விவசாய விளைபொருட் களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதுதான் விவசாயிகளின் நீண்டகால மனக்குறையாக இருந்து வருகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நேரத்தில் தக்காளி, பப்பாளி, பால் போன்றவற்றை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இத்தகைய நிலையைத் தடுத்து, வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

வேளாண் உற்பத்தித் திறனைஅதிகரித்தல், விளைபொருட் களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வளர்ச்சிக்கு வழிசெய்தல் ஆகியவற்றில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியன மதிப்புக் கூட்டப்பட்டு உழவர்உற்பத்தியாளர் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகின்றன.

அதன்படி, உள்ளூரிலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சென்னை போன்ற நகரங்களில் நடைபெறும் கண்காட்சிகளிலும், ஸ்டால்கள் மூலமும் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஆன்-லைன் மூலமாகவும் விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில், மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்களுக்கு பொதுவான வணிக முத்திரையை உருவாக்க வேளாண் விற்பனைத் துறை தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் வேளாண் விற்பனைத் துறை மூலம் 318 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும், நபார்டு போன்ற பிற அமைப்புகள் மூலம் 730 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் செயல்படுகின்றன. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வித்துக்களை பவுடராகவும், திரவ நிலையிலும் மதிப்புக்கூட்டி வரகு மாவு, கம்பு அவல், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வெவ்வேறு தரத்தில், பேக்கிங்கில் விற்கின்றனர். பொதுவான வணிக முத்திரை இல்லாததால் எதிர்பார்த்த விற்பனை நடைபெறவில்லை.

அதனால், இந்தியத் தர நிறுவனம் தெரிவித்துள்ளபடி மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களைத் தரமாகவும், ஒரே மாதிரியான பேக்கிங்கிலும் தயாரித்து விற்பனை செய்ய வசதியாக பொதுவான வணிக முத்திரையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இப்பணி முடிந்ததும், தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களும் ஒரே வணிக முத்திரையின் கீழ் விற்பனை செய்யப்படும். அதன்மூலம் வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

முன்னதாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் 5 பேரைத் தேர்ந்தெடுத்து ஒருவாரம் தொழிற்கூடத்திலும், ஒரு வாரம் தொழிற்சாலை போன்ற வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.2.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரபல நிறுவனங்களின் பேக்கிங், பிராண்டிங் மற்றும்ஏற்றுமதி குறித்து, நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொழிற்கூடம் மற்றும் தொழிற்சாலைகளில் மொத்தம் இரண்டு வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in