

திருப்பூர்: தமிழக நதிகளின் அழிவைத் தடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தியாவின் ‘தண்ணீர் மனிதர்’ என அழைக்கப்படும் ராஜேந்திர சிங் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர சிங், இந்தியாவின் 'தண்ணீர் மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்களை நேற்று சந்தித்து ராஜேந்திர சிங் பேசியதாவது:
தமிழகத்தில் மலைகள், நதிகள், தொழில் வளம் உள்ளிட்டவை உள்ளன. இந்த வளங்களை பாதுகாக்க மக்கள் மறந்துவிட்டனர். தமிழகத்தில் காவிரி ஆறு உட்பட பல ஜீவ நதிகள் மோசமான நிலையில் உள்ளன. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஜீவநதியாக கருதப்படும் நொய்யல் ஆறும் மோசமாக உள்ளது.
எந்த நாட்டில் நீர்நிலைகள் மோசமான நிலையில் உள்ளதோ, அந்நாட்டில் மக்களின் வாழ்க்கைச் சூழலும் மோசமடையும். நதிகள், நீர்நிலைகளை இசை வடிவில் கொண்டாடும் தமிழகத்தில் நதிகள் இந்நிலையில் உள்ளது, வேதனையளிக்கிறது.
தமிழகத்தில் கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை நீர்நிலைகள் எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து, மேம்படுத்த வேண்டும். நீரை தேவையான அளவில் பயன்படுத்தவும், மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தவும் அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்தாலும் ஆறுகளில் கலக்க விடக்கூடாது. மறுசுழற்சி செய்து மீண்டும் மீண்டும் அவர்களே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீபகற்ப இந்திய நதிகள் பாதுகாப்புக்கென ‘இந்திய பெனின்சுலார் ரிவர் கவுன்சில்’ மூலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதில் காவிரி ஆறும் முதன்மை நதிகளில் ஒன்றாக உள்ளது. மணல் மாஃபியாக்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீர்நிலைகளை காப்பதற்கான நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
தவறான நீர் மேலாண்மையால் தமிழக நதிகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதைத் தடுக்க தமிழகத்துக்கென ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும். மக்கள் தங்களது வாழ்க்கையை நீர்நிலைகளுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கல்வி முதலே நதிகள் பாதுகாப்பை தீவிரமாக போதிக்க வேண்டும் என்றார்.