

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநில பாடலாக தமிழக அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழ்த் தேசிய பேரியக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் அ.ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, பழ.ராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
‘நீராருங் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தமிழ்த் தாய்க்கு மட்டும் வணக்கம் செலுத்தி எழுதப்படவில்லை. தமிழ்த்தாயுடன் பாரதத்தாய், திராவிடத்தாய் என மூவருக்கு வணக்கம் செலுத்தி எழுதப்பட்டுள்ள நிலையில், அதை மாநில பாடலாக தமிழக அரசு அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல.
அதற்குப் பதிலாக, தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் வகையில், புதுச்சேரி அரசு அறிவித்துள்ள பாவேந்தர் பாரதிதாசனின் பாடலான ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' பாடலை மாநில பாடலாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழக ஆளுநர் தனது வரம்பை மீறி, அதிகாரத்தில் தலையிடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் நிதி நிலைமையில் மோசமாக உள்ளதால், அதற்கு தனி மாநில தகுதி வழங்க வேண்டும். பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. உடனடியாக, இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புக்காக ஆயிரக்கணக்கானோர் தேர்வு செய்யப்பட்டு, நிதியின்மையால் பணி அமர்த்தப்படவில்லை. அவர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.