

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய 5 கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில்லை என்ற முடிவில் மக்கள் நலக் கூட்டணி உறுதியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ''மக்கள் நலக் கூட்டணி சார்பில் 4 கட்ட பிரச்சாரம் முடிந்துள்ளது. இந்த மாத இறுதியில் 5-வது கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளோம். மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய 5 கட்சிகளுடன் கூட்டணி இல்லை என முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த 5 கட்சிகள் இருக்கும் அணியிலும் நாங்கள் இருக்க மாட்டோம். மக்கள் நலக் கூட்டணியில் இணையுமாறு தேமுதிக, தமாகாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம்.
உடுமலையில் காதல் திருமணம் செய்த் தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து எங்கள் கூட்டணி சார்பில் வரும் 21-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழக அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் வருகின்றனர். அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.