கர்நாடகா அரசால் தேடப்பட்ட பெண் மாவோயிஸ்ட் திருப்பத்தூரில் சரண்: வேலூர் சரக டிஐஜி தகவல்

கர்நாடகா அரசால் தேடப்பட்ட பெண் மாவோயிஸ்ட் திருப்பத்தூரில் சரண்: வேலூர் சரக டிஐஜி தகவல்

Published on

கர்நாடகா காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்ட் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார்.

இது குறித்து வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

‘கர்நாடகா மாநிலம், சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபா (எ) சந்தியா என்பவர் மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்தார். இவர் மாது, நேத்திரா, விண்டு என பல பெயர்களில் மாவோயிஸ்டாக இருந்து வந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் இவர் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். கர்நாடகா மாநிலம் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவுக்கு உட்பட்ட பகுதிகளில் இவர் தீவிரமாக பணியாற்றியுள்ளார். இவர் மீது கர்நாடகா மாநிலம், சிமோகா, உடுப்பிஉள்ளிட்ட மாவட்டங்களில் 44 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகா அரசு இவரது தலைக்கு ரூ.5 லட்சம் வரை சன்மானம் அறிவித்திருந்தது.

இவரது கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராகவும், அந்த இயக்கத்தின் மேற்கு தொடர்ச்சி சிறப்பு மண்டல குழுவின் பொறுப்பாளராக இருந்தபோது, கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி கேரள மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி கர்நாடகா மாநிலத்தில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவரார். அவரது தலைக்கும் அம்மாநில அரசு ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிடத்திருந்தது. இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து வெளியேறி அமைதியான வாழ்வை சமுதாயத்துடன் இணைந்து வாழ விருப்பப்பட்ட பெண் மாவோயிஸ்ட் பிரபா (எ) சந்தியா திருப்பத்தூர் க்யூ பிரிவு மூலம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷணன் தலைமையில் சரணடைந்துள்ளார்’’. இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in