தமிழகத்தில் வேளாண் விளைபொருள் ஆணையம் அமைக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி கோரிக்கை

தமிழகத்தில் வேளாண் விளைபொருள் ஆணையம் அமைக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி கோரிக்கை
Updated on
2 min read

தமிழகத்தில் வேளாண் விளைபொருள் ஆணையத்தை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி தனியார் ஹோட்டலில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

”முன்னெப்போதையும்விட தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அதைக் கலைக்க வேண்டும் என்று அண்மைக்காலமாக பாஜக வலியுறுத்தி வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் கண்டிக்கிறது.

இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரித்து, நாட்டில் 70 ஆண்டுகள் இல்லாத வேறுபாட்டை மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது. இது, இந்திய அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது. இதுபோன்ற செயல்பாடுகளுக்காக குடியரசுத் தலைவர் மத்திய அரசைக் கலைக்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு மத்திய அரசுதான் காரணம். எனவே, மத்திய அரசை எதிர்த்துப் போராட வேண்டிய அதிமுக, திமுக அரசை எதிர்த்துப் போராடுவது என்பது அரசியலே. தமிழ்நாட்டில் அதிமுக வீழ்ச்சி அடைய பாஜகவுடன் வைத்துக் கொண்ட உறவும், நெருக்கமும்தான் காரணம்.

கடந்த 10 ஆண்டுகளில் தேசிய அளவைவிட தமிழ்நாட்டு விவசாயிகளின் சராசரி கடன் சுமை 65 சதவீதம், ரூபாயில் சராசரி கடன் ரூ.1,00,266 ஆக உள்ளதாக நாபார்டு வங்கி அண்மையில் கூறியுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் 10 ஆண்டு கால ஆட்சியில் இருந்த அரசின் தோல்வியை அறிந்து கொள்ளலாம்.

வேளாண் விளைபொருள் ஆணையத்தை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். அப்போதுதான் அரசு நிர்யணிக்கும் விலையைவிட குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய முடியாத நிலை உருவாகும்.

வேறு தொழில் செய்யாமல் விவசாயத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ள விவசாய குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உதவித் தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.

"நீராரும் கடலுடுத்த" பாடலை மாநில அரசின் பாடலாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை காங்கிரஸ் வரவேற்கிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்ப்பதில் அரசியல் இல்லை, அது மாணவர்களுக்கான பிரச்சினையே. அரசு கட்டும் கட்டிடங்கள் 30 ஆண்டுகளில் பழுதடைந்துவிடுவதென்பது சமூகப் பிரச்சினை, நாட்டின் சீரழிவு. பெண்களுக்கான திருமண வயது 21 என்பதை சட்டமாக இல்லாமல், பிரச்சாரமாக செயல்படுத்த வேண்டும்.

பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட இந்தியா இதுவரை உடையாமல் இருப்பதற்கு மொழிவழி மாநிலங்களை ஜவஹர்லால் நேரு உருவாக்கியதுதான் காரணம். ஆனால், மற்ற கலாச்சாரங்களை அழிப்பதுதான் பாஜகவின் கொள்கை. அதனடிப்படையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கிறது. தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமரைத் திரும்பிப் போக வேண்டும் என்று ஒரு மாநில அரசு கூற முடியாது. அதேவேளையில், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பாஜக அரசை தொடர்ந்து கடுமையாக எதிர்த்தும், பேசியும் வருகின்றனர். பாஜகவுடன் சமரமசமற்ற நிலையில்தான் திமுக உள்ளது.

ஆளுநர் தனக்கு உண்டாகும் சந்தேகத்தை முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோரிடமும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து டிஜிபி-யிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கோப்புகளை ஆய்வுக்கு எடுத்து வருமாறு கூறுவது தவறு.

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைவில் அரசு இழப்பீடு வழங்கவுள்ளது. இருப்பினும், பயிர்க் காப்பீடு செய்வதுதான் முக்கியம்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும் விவகாரத்தில் சட்டப்பூர்வ வழியைப் பின்பற்றாமல், ஓடி மறைவது, காழ்ப்புணர்ச்சி என்று கூறுவது ஏற்புடையதல்ல. ஜனநாயக நாட்டில் சட்டத்தின் துணை அவர்களுக்கு உள்ளது” என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன், மாநில துணைத் தலைவர்கள் சுபசோமு, சுஜாதா, மாவட்டச் செயலாளர் பிலால், இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் விச்சு என்ற லெனின் பிரசாத், மாவட்டப் பொருளாளர் ராஜா நசீர், முன்னாள் மாவட்டத் தலைவர் அரியலூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் தேசிய அளவைவிட தமிழ்நாட்டு விவசாயிகளின் சராசரி மாத வருமானம் ரூ.9,785, சராசரி கடன் சுமை 65 சதவீதம், ரூபாயில் சராசரி கடன் ரூ.1,00,266 ஆக உள்ளதாக நாபார்டு வங்கி அண்மையில் கூறியுள்ளது.

இது, தேசிய அளவில் உள்ளதைக் காட்டிலும் அதிகம். இந்த அறிக்கையின் மூலம் 10 ஆண்டு கால ஆட்சியில் இருந்த அரசின் தோல்வியை அறிந்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in