

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் சுமார் 170 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க முடிவு செய்திருப்பதாகவும், முதற்கட்டமாக 28 பள்ளிக் கட்டிடங்களை இடிக்கும் பணி துவங்கியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கழிவறைக் கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆய்வுசெய்து, சிதிலமைடந்த நிலையிலும், உறுதியற்ற நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 522 அரசு தொடக்கப்பள்ளிகளும், 203 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 69 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 76 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 870 அரசுப் பள்ளிகளும், 108 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 197 தனியார் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் 1175 பள்ளிகள் உள்ளன.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை உத்தரவின் படி, பொதுப்பணித்துறை கட்டிட அதிகாரிகள் கடந்த இரு தினங்களா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ததில் சுமார் 170 அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாக கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக சில பள்ளித் தலைமையாசிரியர்களிடம் பேசியபோது, "அரசுப் பள்ளி வளாகங்களில் பழைய கட்டிடங்களில் மாணவர்கள் அமர இயலாத நிலையில் கூடுதல் வகுப்பறைக்காக கட்டப்பட்டு அங்கு மாணவர்கள் பயிலுகின்றனர். இருப்பினும் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவதால், அங்கு விஷத் தன்மைக் கொண்ட உயிரினங்களின் புகலிடமாக மாறியுள்ளது.
மேலும் அவை இடத்தையும் ஆக்கிரமித்து மாணவர்களின் புழக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் பொதுப்பணித் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் பயனில்லை. தற்போது 3 மாணவர்களின் உயிரிழப்புக்குப் பின் தான் விழித்துக் கொள்கின்றனர் என்றனர் ஆதங்கத்தோடு. மேலும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதையும் அரசு தற்போதே செயல்படுத்தவேண்டும்" என்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரிடம் கேட்டபோது, "170 பள்ளிகளில் கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் மிகவும் மோசமான நிலையில் உள்ள 28 கட்டிடங்களை இடிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறையினர் தலைமையாசிரியர் அறை தொடங்கி, கழிவறை வரை தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.