Last Updated : 19 Dec, 2021 05:06 PM

 

Published : 19 Dec 2021 05:06 PM
Last Updated : 19 Dec 2021 05:06 PM

முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பில் 3% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுவை முதல்வர் ரங்கசாமி | கோப்புப்படம்.

புதுச்சேரி: புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அடுத்தாண்டு மருத்துவப் படிப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றியின் பொன்விழா மற்றும் புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் 16-ம் ஆண்டு விழா இன்று(டிச. 19) லாஸ்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

விழாவில் 1971 இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நினைவு பரிசுகளும், அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகையும் முதல்வர் வழங்கினார். இவ் விழாவில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், செல்வகணபதி எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலவர் ரங்கசாமி பேசியதாவது:

''நாட்டின் எல்லையில் கடும் குளிர், மழையையும் பொருட்படுத்தாமல் 24 மணி நேரம் பணியாற்றி நாட்டையும், மக்களையும் ராணுவ வீரர்கள் பாதுகாக்கின்றனர். ஆகவேதான் ராணுவ வீரர்களுக்காக அரசு அதிக நிதியை செலவிடுகிறது.

கண்ணுக்கு தெரிந்த எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் கண்ணுக்கு தெரியாத எதிரி கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் 82 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். இது 100 சதவீதமாக ஆக வேண்டும்.

இந்தியா – பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை இனி முப்படை நலத்துறை அலுவலகத்தில் கொண்டாட வேண்டும். அப்போதுதான் நாங்கள் அலுவலகத்துக்கு வர முடியும். நான் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற அசைக்க முடியாது எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தேன். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வியில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்கள்.

இந்தாண்டு கொடுக்க முடியாது. அடுத்தாண்டு மருத்துவ கல்வியில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் அரசு பணியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அது இப்போது இல்லை. குரூப் சி பணியிடங்கள் குரூப் பி ஆக மாறிவிட்டது. இதனால் குரூப் பி பணியிடத்தில் உடனே இடஒதுக்கீடு அறிவிக்க முடியாது. இதுகுறித்து நிர்வாகத்தில் கலந்து பேசி இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பு இருந்தால், நிச்சயமாக இடஒதுக்கீடு வழங்கப்படும்.''

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x