பொள்ளாச்சியில் தென்னை நார் உற்பத்தி நிறுவனங்களில் அமைச்சர்கள் பெயரில் பணம் வசூல்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
Updated on
1 min read

கோவை: பொள்ளாச்சியில் தென்னை நார் உற்பத்தி நிறுவனங்களில் அமைச்சர்கள் பெயரில் பணம் வசூல் செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பகுதியில் ஆளும்கட்சி அமைச்சர்கள் பெயர் தென்னை நார் உற்பத்தி நிறுவனங்களிடம் நிறைய தொகையை வசூலிக்கப்படுவதாக வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக கோவையில் இன்று (டிச.19) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை பொள்ளாச்சி பகுதியில் கயிறு தயாரிக்கும் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகம் இயங்கி வருகின்றன. கயிறு பொருட்களுக்கான ஏற்றுமதியும் இந்தியாவில் இருந்து அதிகரித்து வருகிறது. கேரளாவைவிட இங்குள்ள தொழில்நிறுவனங்கள் வளர்ந்துவரும் சூழலில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென்னை நார் சார்ந்த தொழில்களை, 'வெள்ளை' என்ற வரிசையில் இருந்து மாற்றி, அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை வகைப்படுத்தும் 'ஆரஞ்சு' வரிசையில் வகைப்படுத்தியுள்ளது.

ஒரு தொழில்சார்ந்து மாசு ஏற்படுகிறது எனில் அந்த பகுதி மக்களின் உடல்நலன், சுகாதாரம் ஆகியவை முக்கியம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த பிரச்சினைக்கு அறிவியல் ரீதியாகவும், தொழில்வளர்ச்சி பாதிக்காத வகையிலும் தீர்வு காண அரசு உதவி செய்ய வேண்டும்.

ஆனால், ஆளும்கட்சி அமைச்சர்கள் பெயரில் தென்னை நார் உற்பத்தி நிறுவனங்களிடம் நிறைய தொகையை வசூலிக்கப்படுவதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. இதை தமிழக முதல்வர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணம் பெறுபவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் இருக்கின்றனர். வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் கைத்தறி ரகங்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த வரியிலிருந்து கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய, மாநில நிதிமயைச்சர்களிடம் வலியுறுத்துவேன். தமிழக முதல்வரும் மாநில நிதியமைச்சர் மூலமாக ஜிஎஸ்டி கவுன்சிலில் வலியுறுத்த வேண்டும்.

கோவை மாநகராட்சியைப் பொருத்தவரை குப்பை எடுப்பது மோசமாக உள்ளது. தெருவிளக்குகள், சாலைகளை புதிதாக அமைத்து கொடுப்போம் என உறுதி அளித்துள்ளனர். இன்னும் ஒரு மாத காலம் பொறுத்திருப்போம். அதுவரை எந்த பணியும் நடைபெறவில்லையெனில், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

மத தீவிரவாதத்தை வளர்க்கும் குழுக்களுக்கு ஆதரவான கம்யூனிஸ்ட் அரசு காரணமாக, கேரளாவில் மதரீதியாக படுகொலைகள் தொடர்வது வேதனைக்குரியது. இதுபோன்ற படுகொலைகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in