

42 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கண்டித்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை கைது செய்த சிங்கள கடற்படை அவர்கள் பயன்படுத்திய 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
அண்மைக்காலங்களில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 42 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ராமேஸ்வரம் - இலங்கை இடையிலான குறுகிய கடல் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டுவது இயல்பானது. இது இரு தரப்பிலும் நடக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.