Published : 19 Dec 2021 05:59 AM
Last Updated : 19 Dec 2021 05:59 AM

தமிழக எல்லைக்குள் விபத்துக்குள்ளாகும் வெளி மாநிலத்தவருக்கும் 48 மணி நேரம் இலவச சிகிச்சை: ‘இன்னுயிர் காப்போம்’ திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நேற்று நடைபெற்ற விழாவில், ‘உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஆதிபராசக்தி அறக்கட்டளை துணைத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் உயர் அலுவலர்கள்.

மேல்மருவத்தூர்

தமிழக எல்லைக்குள் விபத்துக்குள்ளாகும் வெளி மாநிலத்தவர், வெளி நாட்டினருக்கும் 48 மணி நேரம் இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் `இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டதொடக்க விழா நேற்று நடைபெற் றது. ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் `இன்னுயிர் காப்போம் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதைக் காட்டிலும், நாட்டின் சிறந்தமாநிலம் தமிழகம் என்று சொல்லும்போதுதான் எனக்குப் பெருமை.

முன்னணி மாநிலமாக வேண்டும்

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி, சமூகவளர்ச்சி, மகளிர் மேம்பாட்டு எனஅனைத்திலும் தமிழகம் முன்னணிமாநிலமாக இருக்க வேண்டும். அதேசமயம், சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் தொடர்கிறது. விபத்துகளில் இறப்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர் என்பது வேதனைக்குரியது.

எனவே, விபத்துகளைக் குறைத்து, உயிரிழப்புகளைத் தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் இன்னுயிர் காப்போம் திட்டம்.

விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தால், உயிரைக் காப்பாற்ற முடியும். தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணிநேரத்துக்கான அவசர சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளோம். அதற்கு பிறகும், முதல்வர்காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறலாம். அரசு மருத்துவமனைகளுக்கும் மாறிக் கொள்ளலாம்.

609 தனியார் மருத்துவமனைகள்

இந்த திட்டத்தில் 201 அரசு மருத்துவமனைகள், 609 தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்படும். வெளிமாநிலத்தவர், வெளி நாட்டவருக்கும் 48 மணி நேரம் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

அதேசமயம், உரிய பயிற்சி இல்லாமல் இளைஞர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை இயக்கக் கூடாது. சாலை விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

தொடர்ந்து, பெருந்துறை, தஞ்சாவூர், விழுப்புரம், தருமபுரிமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வேலூர் சிஎம்சி, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரிமருத்துவமனை, மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி காவேரி மெடிக்கல் சென்டர், கரூர் அமராவதி மருத்துவமனை, திருநெல்வேலி கேலக்ஸி மருத்துவமனை ஆகியவை ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் இணைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில், நந்திவரம் ஆரம்ப சுகாதாரநிலையம் சென்ற ஸ்டாலின், கரோனா தடுப்பூசி விவரங்களைக் கேட்டறிந்தார்.

பின்னர், ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவமனைக்கு சென்ற முதல்வர், அவசர சிகிச்சைப் பிரிவைத் திறந்துவைத்தார். சாலை விபத்துக்குள்ளாகி அங்கு சிகிச்சை பெற்று வரும் ரங்கநாதன் என்பவரிடம் உடல் நலன் குறித்து விசாரித்த முதல்வர், அவருக்கு இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி, எஸ்.அரவிந்த் ரமேஷ், எழிலரசன், எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் பி.செந்தில்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், தேசிய நலவாழ்வுக் குழு இயக்குநர்தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் எஸ்.உமா ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x