Published : 19 Dec 2021 07:19 AM
Last Updated : 19 Dec 2021 07:19 AM

கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மைய விருது பெறும் ‘தி இந்து’ குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன் வாழ்த்து

கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையத்தின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ‘தி இந்து’ குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு முதல்வர் ஸ்டாலின், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையம் மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில், இதழியல் துறையில் சிறப்பாக செயல்படுவோரை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையத்தின் முன்னாள் மாணவியும், ‘தி இந்து’ குழுமத்தின் தலைவருமான மாலினி பார்த்தசாரதிக்கு இந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள மாலினி பார்த்தசாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘இந்திய இதழியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்திருக்கும் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவராக பணியாற்றும் மாலினிபார்த்தசாரதிக்கு கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையத்தின் உயரிய விருது வழங்கப்பட்டிருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்க அவரை வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘இதே நடுநிலை மற்றும் துணிச்சலோடு‘தி இந்து’ குழுமத்தின் பத்திரிகைகளை வழிநடத்தி சிறந்த முறையில் தொடர்ந்து மக்கள் தொண்டு ஆற்றவேண்டும் என்று மாலினி பார்த்தசாரதியை மனமார வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x