

திமுக சார்பில் மாவட்டச் செயலர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், புதுச்சேரி மாநில அமைப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
திமுக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், நடவடிக்கைகள் மூலம் திமுக அரசு மீதான நன்மதிப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அது குறையாமல் கட்சியினர் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருசிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த கட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுவிடுகிறது. அதை கட்சியினர் தவிர்க்க வேண்டும்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும்மறைமுகத் தேர்தலில் போட்டியிடும் மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது, கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்கள், மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களாக தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை தேர்வு செய்வது, நிர்வாகிகள் சிலர் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது, க.அன்பழகன் நூற்றாண்டு விழா குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிறைவாக, க.அன்பழகன் நூற்றாண்டு விழாவை திமுகவின் ஒவ்வொரு மாவட்டக் கழகம்சார்பிலும் ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, ஸ்டாலின் 1989-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ‘தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்’ எனும் நூல்வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. பூம்புகார்பதிப்பகம் வெளியிட்ட இத்தொகுப்புநூலை கட்சியின் பொதுச் செயலாளர்துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார். துணைபொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி,ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், மகளிர்அணி செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.