

மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை 6 தனிப் படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆவின் உட்பட அரசு துறைகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி பெற்று மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டியன், விஜயநல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அவரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். நேற்று மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குறித்து சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனிடம் நேற்று முன்தினம் இரவு போலீஸார் விசாரித்தனர்.
அதையடுத்து கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார்(38), ரமணன்(34), கார் ஓட்டுநர் ராஜ்குமார்(47) ஆகியோரை திருத்தங்கல் காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீஸார் விசாரித்தனர். இவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் மனோகரும் விசாரணை செய்தார்.
பின்னர், மூவரும் விருதுநகரில் எஸ்.பி. அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்டக் குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் ஒரு டிஎஸ்பி, 4 இன்ஸ்பெக்டர்கள் நேற்று விசாரித்தனர்.
இதையறிந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் அங்கு வரத்தொடங்கினர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கருதி மாவட்ட குற்றப் பிரிவு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகிய அலுவலகங்களின் நுழைவு வாயில் கதவுகள் அடைக்கப்பட்டன.
விசாரணை முடிந்து வசந்தகுமார் உள்ளிட்ட மூவரும் நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயர் நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே, ராஜேந்திரபாலாஜியின் சகோதரி லட்சுமி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனது மகன்கள் வசந்தகுமார், ரமணா, ராஜேந்திரபாலாஜியின் கார் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் போலீஸார் துன்புறுத்தி உள்ளனர். மூவரிடமும் கையெழுத்து பெற்றுள்ளனர். உறவினர் என்பதற்காக எங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்
இந்த மனுவை அவசர வழக்காக நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "குற்றச்சாட்டுக்கு ஆளானவரை எப்படி வேண்டுமானாலும் தேடிக் கொள்ளுங்கள், ஆனால் குடும்ப உறுப்பினர்களைதொந்தரவு செய்யக் கூடாது. குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம் என கூறி விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.
மேல்முறையீடு
இந்நிலையில் இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் அளிக்கக்கோரி ராஜேந்திரபாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், புகார்தாரரான விஜய்நல்லதம்பி தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி. ரவீந்திரன் என்பவர் அளித்துள்ள புகாரில் அவருடைய பெயரும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளது. போலீஸார் அந்த விஜய் நல்லதம்பியை காப்பாற்றும் நோக்கத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். ஒரே குற்றச்சாட்டுக்காக போலீஸார் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் தர வேண்டும், என அதில் கோரியுள்ளார்.