Published : 19 Dec 2021 07:09 AM
Last Updated : 19 Dec 2021 07:09 AM

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை ஊக்குவிக்கும் ‘முன்மாதிரி கிராம விருது’க்கு கிராமங்களை தேர்வு செய்ய குழு அமைப்பு: நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட உள்ள முன்மாதிரி கிராம விருதுக்கு கிராமங்களை தேர்வு செய்ய குழுவை அமைத்து, விருதுத்தொகைக்கான நிதியையும் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலர் அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், ’முன்மாதிரி கிராம விருது’ தோற்றுவிக்கப்பட்டு மாவட்டத்துக்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 37 கிராம ஊராட்சிகளுக்கு விருது வழங்கப்படுவதுடன் கேடயம், ரூ.7.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும். மேலும், மாவட்ட அளவிலான விருதுகளுடன் சிறப்பாக செயல்படும் 3 ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன்மாதிரி கிராம விருது வழங்கப்பட்டு அதற்கான கேடயமும், தலா ரூ.15 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், முன்மாதிரி கிராமம் விருதுக்கு அந்த கிராமத்தில், திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலை, திடக்கழிவு மேலாண்மை, பெறப்படும் குப்பையை மறுசுழற்சிசெய்தல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, வீட்டுக் கழிவுநீர் மேலாண்மை, களப்பகுதியில் தூய்மை தொடர்பாக வழங்கப்படும் விழிப்புணர்வு, கிராமம் தொடர்பான அழகியல் பார்வை, கிராமத்தில் தூய்மை தொடர்பான சிறப்பு முயற்சிகள் உள்ளிட்ட 8 சிறப்பம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சி இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து, இந்த 8 சிறப்பம்சங்களை அடிப்படையாக கொண்டு விருதுகளை வழங்க தமிழக ஊரக வளர்ச்சித்துறை முடிவு செய்து, அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் சிறப்பாக செயல்படும் முன்மாதிரி கிராமத்தை தேர்வு செய்ய, மாநில அளவில், ஊரகவளர்ச்சி இயக்குனர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு ஒரு குழுவும், வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலரை கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 37 மாவட்டங்களில் தலா ஒரு கிராம ஊராட்சிக்கு முன்மாதிரி கிராமம் விருது வழங்குவதற்கு ரூ.7.5 லட்சம் விதம் ரூ.2கோடியே 77 லட்சத்து 50 ஆயிரமும், சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் விருது வழங்க தலா ரூ.125 லட்சம் வதம் 45 லட்சமும் என மொத்தம் ரூ.3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கும்படி ஊரக வளர்ச்சி இயக்குனர் அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். அதன் அடிப்படையில், ஊரகவளர்ச்சி இயக்குனர் கோரிய நிதியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், முன்மாதிரி கிராமத்தை தேர்வு செய்ய அடிப்படையாக வைக்கப்பட்டுள்ள 8 சிறப்பம்சங்கள் குறித்த விளக்கமும், எதன் அடிப்படையில் அவற்றை கணக்கிட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x