Published : 19 Dec 2021 08:54 AM
Last Updated : 19 Dec 2021 08:54 AM

சென்னைக்கு அடுத்து கோவை என்ற நிலையில் திட்டங்கள்: மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற தனியார் துறையினருக்கான வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை நேற்று வழங்கிய அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.

கோவை

சென்னைக்கு அடுத்து கோவைஎன்ற நிலையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவ தாக, மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறையினருக்கான வேலைவாய்ப்பு முகாம், ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பணிநியமன உத்தரவுகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசும்போது, "மாவட்டங்கள்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி,இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சிறப்பான திட்டங்களை முதல்வர் அறிமுகப் படுத்தியுள்ளார். அதன்படி, கோவைமாவட்ட வேலைவாய்ப்பு மையம்,தொழில்நெறி வழிகாட்டு மையம்சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளன.

மாவட்டத்தில் நடந்த ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ மாநாட்டில் 82 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வாயிலாக 92 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து கோவை என்ற நிலையில்பல்வேறு திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன. மோட்டார் உற்பத்தியில் நாட்டிலேயே கோவைசிறந்து விளங்கும் வகையிலும், தொழில்துறை, மருந்து தயாரிப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்தமுன்னேற்றத்துக்கு ஏற்ற வகையிலும் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்" என்றார்.

உக்கடம் - புல்லுக்காடு பகுதியிலுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக் கட்டிடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், மாநகராட்சியுடன் இணைந்து உக்கடம் கலைக்கூடம்,ஸ்ட்ரீட் ஆர்ட் ஆஃப் இண்டியாபவுண்டேஷன் சார்பில், சுவரோவி யங்கள் வரையப்பட்டுள்ளன. இதன்நிறைவு விழா நேற்று நடைபெற் றது. சுவரோவியங்களை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பார்வை யிட்டார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘‘கடந்த அதிமுக ஆட்சியில், மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. அப்படி புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புல்லுக்காடு பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கோவை மாநகராட்சியிலுள்ள அரசு சுவர்கள் மற்றும் பாலங்களில் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை நினைவுகூறும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி விரைவில் தொடங்கப்படும். மக்கள்சபைக் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு, பொறியியல் பிரிவில் பெறப்பட்ட 25 மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 9 எண்ணிக்கையிலான சாலை பணிகளுக்கு ரூ.638 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதேபோல், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் மூலமாக ரூ.691 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தெருவிளக்கு வசதிகள், கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநக ராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மண்டல இணை இயக்குநர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x