

குன்னூர் நஞ்சப்பசத்திரத்தில் சாலைவசதியில்லாத நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை சம்பவ இடத்திலிருந்து வெளியே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரத்தில் கடந்த8-ம் தேதி முப்படைகளின் தலைமைதளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், அனைவரும் உயிரிழந்தனர்.
விபத்தில் சிதைந்த ஹெலிகாப்டரின் பாகங்களை விமானப்படையினர் சேகரித்து வந்தனர். சேகரிக்கப்பட்ட பாகங்கள் அப்பகுதியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நஞ்சப்பசத்திரத்தில் சாலை வசதியில்லாததால் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து பாகங்களை வெளியே கொண்டு செல்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், பாகங்களை எவ்வாறு வெளியே கொண்டு செல்வது என விமானப்படையினர் ஆலோசித்து வருகின்றனர். விமான பாகங்கள் எடை அதிகமுள்ளவை என்பதால், மனித ஆற்றல் மூலம் வெளியே கொண்டுவர முடியாத நிலை உள்ளது. கிரேன்போன்ற கன ரக வாகனங்கள் மூலமே பாகங்களை அங்கிருந்து தூக்கி வர வேண்டிய நிலையுள்ளது. ஆனால், விபத்து நடந்த பகுதிக்கு சாலை இல்லாததால் கிரேன் போன்றவாகனங்கள் செல்ல முடியாது.
இந்நிலையில், தற்காலிகமாக சாலை அமைக்கலாம் என்றால், அப்பகுதி வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இடம். சாலை அமைக்க அங்குள்ள பல மரங்களை வெட்ட வேண்டிய நிலையுள்ளது. அதற்கு வனத்துறை மூலம் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.நஞ்சப்பசத்திரத்திலிருந்து மரப்பாலம் பகுதிக்குச் செல்ல பழங்குடியினர் பயன்படுத்தும் ஒற்றையடி பாதையுள்ளது. இந்த பாதையில் விஞ்ச் அமைத்து, மரப்பாலம் பகுதிக்கு கன ரக வாகனங்கள் மூலம் ஹெலிகாப்டர் பாகங்களை கொண்டு செல்ல விமானப்படையினர் ஆலோசித்து வருகின்றனர். இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் பேசியுள்ளனர்.
அந்த நிறுவனத்தினர் ஆய்வு செய்து விஞ்ச் அமைக்க முடியும் என தெரிவித்தால் மட்டுமே சிதைந்தஹெலிகாப்டர் பாகங்கள் வெளியே கொண்டு செல்ல முடியும்.