

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் தேடிச் சென்ற 152 ஈழத் தமிழர்களை ஏற்றிச் சென்ற படகு, எண்ணெய் கசிவு காரணமாக கிறிஸ்துமஸ் தீவுகளில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் சிக்கி உள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 13-ம் தேதி, புதுச்சேரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் 32 பெண்கள், 37 குழந்தைகள் உள்பட 152 புறப்பட்டுள்ளனர்.
படகில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், ஆஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவிலிருந்து சுமார் 250 கீ.மி தொலைவில் நடுக்கடலில் நின்றது.
இது தொடர்பாக ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு படகில் பயணித்த டியூக் என்பவர் கூறுகையில், "இந்த படகில் தற்போது சிக்கி உள்ளவர்கள் அனைவருமே இலங்கை தமிழர்கள் ஆவோம். இந்தியாவில் வாழ முடியாததால், புதுச்சேரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இந்த படகில் புறப்பட்டோம். ஆனால் தற்போது எண்ணெய் கசிவு ஏற்பட்டு கோளாறு ஆகி நடுக்கடலில் சிகியுள்ளோம்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், கடலில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது, பெரும் அலைகள் படகை தாக்குகின்றன. இங்கு சில மீன்பிடி படகுகள் இருப்பது போன்ற விளக்கு ஒலிகள் எங்களுக்கு தெரிகிறது, ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எங்களை காப்பாற்ற யாரேனும் உதவ வேண்டும்" என்றார்.
கடல் எல்லைப்பகுதியில் சிக்கும் படகுகளை மீட்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் அனைத்து மேற்கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில், தஞ்சம் புகுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தஞ்சம் தேடி வருவோருக்கான கட்டுபாடுகளை ஆஸ்திரேலிய அரசு கடுமையானதாக மாற்றியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 19-க்குப் பின்னர் விசா இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் செல்பவர்கள் யாரும் ஆஸ்திரேவியாவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
இவர்கள் நவுரு தீவிலோ அல்லது பப்புவா நியூ கினியாவில் உள்ள மனூஸ் தீவுகளிலோ அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலேயே தங்க வைக்கப்படுகின்றனர்.
கடந்த 6 மாதகங்களாக ஆஸ்திரேலியா கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற படகுகள் பல இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்போது நடுக்கடலில் மாட்டியிருக்கும் படகு இந்தோனேசியாவில் இருந்து வராததால் அந்தப்படகு எங்கு கொண்டு செல்லப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
சமீப காலமாக, ஆஸ்திரேலியாவுக்கு இவ்வாறு பயணிக்கும் அகதிகள் நூற்றுக்கணக்கானோர் கடலில் சிக்கி உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.