ஓரம் கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?- அதிமுகவில் சலசலப்பு

ஓரம் கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?- அதிமுகவில் சலசலப்பு
Updated on
1 min read

அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். அமைச்சரவையிலும் முதல்வருக்கு அடுத்த இடம் இவருக்கு தான். அதனால்தான், ஜெயலலிதா 2 முறை முதல்வர் பதவியை இழந்தபோதும் பன்னீர்செல்வத்தையே முதல்வராக்கினார்.

அந்த அளவு நம்பிக்கைக்குரிய வராக இருந்த பன்னீர்செல்வம், சமீபகாலமாக ஓரங்கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் மீதான முதல்வரின் கோபத் துக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. தேர்தலில் சீட் கேட்டு பலரும் பன்னீர்செல்வத்தை அணுகியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், பன்னீர்செல்வம் மற்றும் அவரது இரு மகன்களின் செயல்பாடுகள் தொடர்பாக உளவுப்பிரிவினர் தகவல்களை சேகரித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளின்போது வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு சிறுமி கதறக் கதற அவரது கையில் முதல்வரின் உருவம் பச்சை குத்தப்பட்டது. இதை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற வாட்ஸ் அப் வீடியோ வெளியானது.

இதைத் தொடர்ந்தே, பன்னீர்செல்வத்தின் நம்பிக்கைக்குரிய வர்களாக இருந்த மீனவர் பிரிவைச் சேர்ந்த ரமேஷ், வேளச்சேரி எம்எல்ஏ அசோக்கின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னணி அமைச்சர்கள் யாரும் மேடையில் ஏற்றப்படவில்லை.

மேலும், நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் பங்கேற்க பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பனுக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்றும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், பன்னீர்செல்வத் தின் ஆதரவாளர்களில் ஒருவராக கருதப்படும் அமைச்சர் சி.விஜய பாஸ்கரின் மாவட்டச் செயலாளர் பதவி நேற்று திடீரென பறிக்கப் பட்டுள்ளது. இதுபோன்ற பின்னணியில், இந்தமுறை தேர்தலில் பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற பேச்சும் அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in