

அதிமுக பொதுச் செயலர் பதவி மற்றும் அதிமுக கொடியைப் பயன்படுத்தும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமார்அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அவைத் தலைவரிடம்தான் கட்சி உரிமை உள்ளது. உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையமும் இதை தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், சட்டத்தை மீறி தன்னை பொதுச் செயலாளர் என்று சசிகலாகூறி வருகிறார். கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும் அதிமுக பொதுச் செயலர்என தன்னைத் தானே கூறிவருகிறார். எந்த அதிகாரமும் இல்லாமல், அதிமுக கொடியை ஏற்றுகிறார். கட்சிக் கொடியை காரில் பயன்படுத்துகிறார்.
இது தொடர்பாக அதிமுக சார்பில் காவல் துறை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்குச் சென்ற சசிகலா, அந்த வளாகத்தில் அதிமுக கொடியை ஏற்றிள்ளார். மேலும், அங்கு தன்னை பொதுச் செயலர் எனக் குறிப்பிட்டு கல்வெட்டும் வைத்துள்ளார்.
வழக்கு பதிவு செய்ய வேண்டும்
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் அவரது செயல்பாடுகள் உள்ளன. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே கடந்த 20-ம் தேதி மாம்பலம் காவல் நிலையத்தில் சசிகலா மீது கொடுக்கப்பட்ட புகார்மீதும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். சசிகலாமீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.