

வழக்கறிஞர்கள் தவறு செய்தாலும் நீதிபதிகள் கோபப்பட கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த எம்.எம்.சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு, தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்றுப் பேசும்போது, ‘‘தமிழகத்தில் விரைவில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் குரல் கொடுக்க வேண்டும்’’ என்றார்.
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி. பேசும்போது, ‘‘சிக்கலான வழக்காக இருந்தாலும் சிரித்த முகத்துடன், அமைதியான முறையில் எளிதாக கையாள்பவர் நீதிபதி சுந்தரேஷ்’’ என்று பாராட்டினார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி, கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பார் கவுன்சில் உறுப்பினர் ஆர்.விடுதலை, அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் ஆகியோரும் நீதிபதி சுந்தரேஷை பாராட்டிப் பேசினர்.
கர்வம் கூடாது
பின்னர் ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி சுந்தரேஷ், ‘‘வழக்கறிஞர்கள் தவறு செய்தாலும் நீதிபதிகள் கோபப்பட கூடாது. நீதிபதி பதவியும் ஆடை மாதிரிதான். எனவே, பதவியில் இருக்கும்போது கர்வம் கூடாது.
தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் நீதிமன்றங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரித்ததாக அர்த்தம். எனவே, மக்களை தேடிச் சென்று நீதி வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைக்கும் விவகாரத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது’’ என்றார்.
அவருக்கு பார் கவுன்சில் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் நினைவுப் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. விழாவில், முன்னாள் நீதிபதிஎன்.கிருபாகரன், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, எம்.கோவிந்தராஜ், ஜி.கே.இளந்திரையன், ஜெ.சத்யநாராயண பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் துணை தலைவர் வி.கார்த்திகேயன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.