

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் 115 மாணவர்கள் அச்சத்தில் உள்ள னர்.
சிங்கம்புணரி அருகே வாராப்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 115 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 2 ஓட்டு கட்டிடங்களும், 2 கான்கிரீட் கட்டிடங்களும் இருந்தன. இதில் ஒரு கான்கிரீட் கட்டிடத்தில் கணினி அறை, ஸ்மார்ட் வகுப்பு தளவாடங்கள், ஆசிரியர்கள் தங்கும் அறை இருந்தது. மற்ற கட்டிடங்களில் வகுப்புகள் நடந்து வந்தன.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் ஓட்டு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. தொடர்ந்து நாடக மேடையில் வகுப்பு நடந்து வந்தது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் மீண்டும் பள்ளி கட்டிடத்துக்கே மாற்றப்பட்டனர்.
தற்போது இடநெருக்கடியில் மாணவர்கள் சிரமப்பட்டு படித்து வருகின்றனர். இதில் ஓட்டு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் 115 மாணவர்கள் அச்சத்துடன் படித்து வருகின்றனர்.
இதேபோல் காளையார்கோவில் அருகே சேத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இதில் 2004-05-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம் முழுமையாக சேதமடைந்ததால் அருகேயுள்ள ஓட்டு கட்டிடத்தில் மாணவர்கள் படிக்கின்றனர். மேலும் சேதமடைந்த கட்டிடத்தால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பாக அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.