மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு புறம் ‘இலவச பார்க்கிங்’; மற்றொரு புறம் ‘கட்டண பார்க்கிங்’- இரு நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் நோயாளிகள் அதிருப்தி

பழைய மகப்பேறு மருத்துவப் பிரிவு வளாகத்தில் செயல்படும் கட்டண பார்க்கிங் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகள்.
பழைய மகப்பேறு மருத்துவப் பிரிவு வளாகத்தில் செயல்படும் கட்டண பார்க்கிங் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகள்.
Updated on
1 min read

மதுரை அரசு மருத்துவமனை மெயின் வளாகத்தில் நிறுத்தும் வாகனங்களுக்கு ‘இலவச பார்க்கிங்’ நடைமுறையும், பழைய மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் ‘கட்டணம் பார்க்கிங்’ பெறும் நடைமுறையும் பின்பற்றப் படுவதால் நோயாளிகள், பார்வையாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை நெரிசல் மிகுந்த பனகல் சாலையில் அமைந்துள்ளது. இங்கு தினசரி 15 ஆயிரம் வெளி நோயாளிகள், 3,800 உள் நோயா ளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆனால் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களை நிறுத்த கட்டணமும் வசூலிக்கப்படுவதால் நோயாளிகள் அதிருப்தி அடைந் துள்ளனர்.

பொதுவாக வருமானம் ஈட்டக்கூடிய இடங்களில் மட்டுமே ‘பார்க்கிங் கட்டணம்’ வசூல் செய்ய அரசு அனுமதி வழங்குகிறது. ஆனால் சேவை நோக்கில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் கட்டண பார்க்கிங்-க்கு அனுமதி வழங்கக் கூடாது. ஆனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை நிர்வாக ஒப்புதல் இல்லாமலேயே, கடந்த பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை ‘பார்க்கிங்’ கட்டண முறைக்கு டெண்டர் விட்டு நடைமுறைப்படுத்தியது. மருத்துவமனை பழைய கட்டிட மெயின் வளாகத்தில் கட்டணம் வசூலுக்கு கடும் எதிர்ப்பு கிளப்பியதுடன், பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு அங்கு இலவசமாக வாகனங்களை பார்க்கிங் செய்கின்றனர். ஆனால், பனகல் சாலையில் உள்ள பழைய மகப்பேறு கட்டிடப் பிரிவுக்கு வரும் நோயாளிகளிடம் கூட பார்க்கிங் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

மேலும் இந்த சிகிச்சைப் பிரிவுக் குக்குள் நுழைய முடியாதபடி கயிறு கட்டியும், தடுப்புக் கம்பிகளை கொண்டு பாதையை மறித்து தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சையும் எழுந்துள்ளது. ஒரே மருத்துவமனை வளாகத்தில் ஒரு பகுதியில் ‘இலவச பார்க்கிங்’ நடைமுறையும், மற்றொரு பகுதியில் ‘கட்டண பார்க்கிங்’ நடைமுறையும் பின்பற்றப்படுதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in