

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
திருவொற்றியூர் டி.எஸ்.கோபால் நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி வைரம். இவர்களின் மகள் தீபா. மகன் தினேஷ் (23). தந்தைக்கு உதவியாக டிராவல்ஸில் வேலை செய்து வந்தார் தினேஷ். கடந்த 14-ம் தேதி இரவு வேலை முடிந்ததும் தினேஷ் தனது பைக்கில் எண்ணூர் விரைவுச் சாலை வழியாக திருவொற்றியூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது பைக் சாலைத் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷ் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். தினேஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்து டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் குழு வினர் அறுவை சிகிச்சை செய்து தினேஷின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதயத்தை எடுத்தனர். தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் கண்களின் கருவிழிகளை எடுக்க முடியவில்லை. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டன. கல்லீரல் மற்றும் இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் 2 நோயாளி களுக்கு பொருத்தப் பட்டன. உறுப்புகள் அகற்றப்பட்ட பிறகு, தினேஷின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து தினேஷின் தந்தை ராஜேஸ்வரன் கூறும்போது, “தினேஷூக்கு விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தோம். அதற்குள் இப்படி நடந்துவிட்டது. மகன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தபோது, அதிர்ச்சி அடைந் தோம். உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து உறவினர்கள், நண்பர்கள் விளக்கிக் கூறினர். எனது மகன் இறந்து போய்விட்டாலும் அவனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதன் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்பதால் தானம் செய்ய ஒப்புக் கொண்டோம். இறந்தும் 4 பேருக்கு உயிர் கொடுத்தான் என் மகன் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என்றார்.