Published : 23 Jun 2014 11:54 AM
Last Updated : 23 Jun 2014 11:54 AM

பாலாறு பிரச்சினையில் வீண் வம்புக்கு இழுக்கிறார் ஜெயலலிதா: கருணாநிதி சாடல்

பாலாறு நதி நீர் பிரச்சினையில், அறிக்கை விடுத்து முதல்வர் ஜெயலலிதா, தன்னை வேண்டுமென்றே வீண் வம்புக்கு இழுப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாலாறு நதி நீர் பிரச்சினை பற்றி புதிய சீமாந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசிய கருத்தினையொட்டி, 21-6-2014 அன்று ஓர் அறிக்கை; அவருக்கு விளக்கமளித்து நான் கொடுத்திருந்தேன்.

அதே பாலாறு பிரச்சினைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு நீண்ட அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தேவையில்லாமல் எப்போதும் போல, நான் கொடுத்த அறிக்கை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.

கிராமங்களில் "செடியடித்து வம்புக்கு இழுப்பது" என்பார்களே, அதைப் போல ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.

நான் கொடுத்த அறிக்கை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய கருத்துக்குப் பதில். அதிலே ஒரு இடத்திலே கூட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பற்றியோ, தமிழக அ.தி.மு.க. அரசு பற்றியோ ஒரு வார்த்தை கூட விமர்சித்துக் கூறவில்லை. ஆனால் முதலமைச்சர் தனது

அறிக்கையிலே வேண்டுமென்றே வீண் வம்புக்கு இழுக்கிறார். அவரது அறிக்கையின் முதல் வாக்கியமே, "ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது உறவுக்கு கை கொடுப்பதும், ஆட்சி அதிகாரம் இல்லாதபோது உரிமைக்குக் குரல் கொடுப்பது போல் நடிப்பதும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கை வந்த கலை" என்று கூறியிருக்கிறார்.

"நடிப்பது" யாருக்கு கை வந்த கலை என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா என்ன? அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் "உறவுக்குக் கைகொடுப்பதும், உரிமைக்குக் குரல் கொடுப்பதும்" தான் தி.மு. கழகத்தின் கொள்கை.

பாலாற்றில் அணை கட்டுவது பற்றி ஆந்திர முதலமைச்சர் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்கு, அவர் ஏற்கனவே கூறியதை எடுத்துக்காட்டி நான் அறிக்கை விடுத்தால், உடனே நடிப்பது எனக்கு கை வந்த கலை என்றும், முழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைக்கிறேன் என்பதும், மிகப் பெரிய

சாதனையைச் செய்தது போல என்னைச் சித்தரித்துக் கொள்கிறேன் என்பதும், இன்னமும் அரசியலில் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ளத் தான் அறிக்கை விடுத்துள்ளேன் என்று கூறுவதும் ஒரு முதலமைச்சர் பதவியிலே உள்ளவருக்கு அழகா? நாகரிகமா? இப்படியெல்லாம் முரண்பாடாக அறிக்கை விடுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளவே மாட்டாரா?

அரசியலில் இன்னமும் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ள நான் அறிக்கை விடவேண்டுமா? என்ன? ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் தினந்தோறும் என்னைப் பற்றித் தானே விமர்சனம் செடய்கின்றன! ஆட்சியிலே இல்லாத போது இதே ஜெயலலிதா அன்றாடம் அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டாரே; அன்றாடம் ஊருக்கு ஊர் போராட்டம் நடத்தினாரே; அவையனைத்தும் அவர் அரசியலிலே இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வதற்காகத் தானா?

காவிரி பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் எந்த நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை என்று பாலாறு பற்றி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையிலே எப்போதும் போல குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் 2006ஆம் ஆண்டுக்குப் பின், ஆந்திர அரசு தடுப்ணை கட்டும் பிரச்சினையை எழுப்பிய போது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா,

அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க. அரசை, வலியுறுத்தியதாகச் சொல்லியிருக்கிறார்.

தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, ஜெயலலிதா இதே பாலாறு பிரச்சினைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிக்கை விடலாம்; ஆனால் அ.தி.மு.க. ஆட்சியிலே இருக்கிற போது பாலாறு பிரச்சினைக்காக நான் அறிக்கை விட்டது பாவகரமான காரியமா? "மாமியார்

உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா?" தமிழ்நாட்டு மக்கள், பத்திரிகையாளர்கள், கற்றறிவாளர்கள் இதிலே என்ன நியாயம் உள்ளது என்பதை தயவுசெய்து சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

பாலாற்றில் அணை கட்டுவது பற்றி சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய செய்தி பத்திரிகைகளில் வந்தவுடன், ஜெயலலிதா அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்ததாகவும், மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளர் 20-6-2014 அன்று இதுகுறித்து கடிதம் எழுதியிருப்பதாகவும் ஜெயலலிதா இன்றைய அறிக்கை (23-6-2014) யில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அரசு அதிகாரிகளிடம் பேசியது பற்றியோ, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது பற்றியோ இந்த அறிக்கை வெளி வரும் வரை எந்தப் பத்திரிகையிலாவது செய்தி வெளியிடப்பட்டதா?

ஆனால் அதே பிரச்சினைக்காக நான் விடுத்த அறிக்கை தான் ஏடுகளில் வெளி வந்தது. அந்த அறிக்கை வெளிவந்த பிறகு தான் முதலமைச்சர் அவசர அவசரமாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இந்தி மொழி பிரச்சினையிலே கூட கடந்த வாரம் நான் அறிக்கை விடுத்து, மத்திய அரசும் நடவடிக்கை எடுத்த பிறகு, அது பற்றி தெரிந்து கொள்ளாமலேயே முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.

இப்படி "தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது போல" செயலாற்றி விட்டு, என் மீது கடிந்து கொண்டு அறிக்கை விடுவது நியாயம் தானா? காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிடிநநாட்டின் உரிமை தன்னால் தான் நிலை நாட்டப்பட்டது என்று அவருடைய அறிக்கையில் தனக்குத் தானே ஜெயலலிதா பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறார். நடுவர் மன்றம் தெரிவித்த காவேரி மேலாண்மை வாரியம் கூட இன்னும் அமைந்த பாடில்லை. காவேரியில் கடந்த மூன்றாண்டு காலமாக நீர் வரவும் இல்லை. குறுவைப் பாசனம் நடக்கவும் இல்லை.

இன்றைக்கு ஜுன் 23ஆம் தேதி; ஜுன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இன்று வரை திறக்கப்படவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டுமென்று பல தரப்பிலும் கேட்டுக் கொண்டும் அதைக் காதிலே போட்டுக் கொள்ளவில்லை.

மின் வெட்டு காரணமாக நடமாடவே முடியவில்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதிலே அறிக்கை வேறு; அதிலே தனக்குத் தானே பாராட்டு வேறா?

பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கிலே விரைவிலே தீர்ப்பு வரப் போகிறது என்பதற்காக என்மீது தேவையில்லாமல் பாடீநுந்து பிறாண்டி அறிக்கை விட்டுப்பயனில்லை. உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத் தானே ஆக வேண்டும்!" என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x