

கோவில்பட்டி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பசுவந்தனை அருகே மேல முடிமண் கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் தற்போதுவிவசாயப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வயல்வெளிகளின் மேல் விவசாய பம்புசெட்டுகளுக்கு மும்முனை மின்சாரம்வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள் சுமார் 7 அடி உயரத்துக்கும் தாழ்வாக செல்கின்றன.
இதன் காரணமாக டிராக்டர் கொண்டு நிலத்தில் உழவுப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றால், 15 அடி உயர கம்புகள் கொண்டு மின்வயர்களை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் விவசாயிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விவசாயி நின்று வேலை செய்ய வேண்டுமென்றாலும் கூட மின்வயர்களை தூக்கி பிடிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பித் தொடர்களால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனை அறியாமல் அப்பகுதிக்கு செல்லும் மக்கள், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து மின் பகிர்மான அலுவலக அதிகாரிகளிடம் கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விபரீதம் நிகழும் முன் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்றனர்.