பண மோசடி: ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களிடம் போலீஸார் தீவிர விசாரணை

பண மோசடி: ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களிடம் போலீஸார் தீவிர விசாரணை

Published on

விருதுநகர்: அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இம்மோசடி வழக்கில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கெனவே இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தலைமுறைவாக உள்ள அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ்குமார் (47) ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், எஸ்.பி. அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் மூவரிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தில் அதிமுகவினர் நுழையாமல் தடுக்கும் வகையில் அனைத்து நுழைவாயில் பகுதிகளிலும் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்திற்குள் யாரும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in