Published : 18 Dec 2021 12:22 PM
Last Updated : 18 Dec 2021 12:22 PM

பொது நூலகங்களில் அரசுப் பணித் தேரவுக்குப் பயிற்சி: வேல்முருகன் கோரிக்கை

சென்னை: பொது நூலகங்களில் அரசுப் பணி தேர்விற்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான நிலையைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொண்டு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கரோனா முடக்கத்தால், தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், குரூப் -2, குரூப் - 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக, அத்தேர்வுகளில் ஆர்வம் காட்டும் மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனைப் பயன்படுத்தி மாணவர்களின் கட்டணமாகப் பெரும் தொகையை நிர்ணயித்துள்ள தனியார் பயிற்சி மையங்கள், இவை தவிர்த்து வேறு சில கட்டணங்களையும் வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அப்படி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்புகளுக்கு வரவேண்டாம் என்றும் சில தனியார் பயிற்சி மையங்கள் கூறிவருகின்றன. அதனால், 75 விழுக்காடு மாணவர்கள் பாதியிலேயே நின்று விடுகின்றனர். ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் சென்று கற்க முடியாத அவல நிலையும் உள்ளது. இக்காரணங்களால், கிராமப்புற மாணவர்களுக்கு அரசுப் பணி என்பது எட்டாக் கனியாகவே நீடிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, அரசுப் பணியில் மாணவர்கள் தேர்வு பெறுவதற்கு சில குறுக்கு வழிகளையும் கையாளத் திட்டமிட்டுள்ள தனியார் பயிற்சி நிறுவனங்கள், வேலை உறுதி என உத்தரவாதம் அளித்து, மாணவர்களிடம் பெரும் தொகையை வசூலிப்பதற்கான சூழ்நிலையும் உள்ளது. ஏற்கெனவே, கடந்த 2019ல், குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் தனியார் பயிற்சி மையங்கள் ஈடுபட்டதற்கான வழக்கு விசாரணையில் இருக்கிறது.

எனவே, கிராமப்புற மாணவர்களின் அரசுப் பணி கனவை நிறைவேற்றும் வகையிலும், தனியார் பயிற்சி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் வகையிலும், பொது நூலங்கங்களில், அரசுப் பணி தேர்விற்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான நிலையைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும்'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x