

புதுக்கோட்டை: தமிழக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உட்பட அதிமுகவைச் சேர்ந்த 1,100 பேர் மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கண்டுகொள்ளாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நேற்று (டிச.17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, புதுக்கோட்டை திலகர் திடலில் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சி.விஜயபாஸ்கர், தெற்கு மாவட்ட செயலாளர் பி.கே.வைரமுத்து ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.கே.வைரமுத்து, முன்னாள் எம்எல்ஏகள் கார்த்திக் தொண்டைமான், ஆறுமுகம், சுப்பிரமணியன், நெடுஞ்செழியன் உட்பட 1,100 பேர் மீது சட்டவிரோதமாக கூடியது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது, தொற்றுநோயை பரப்பும் விதமாக நடந்துகொண்டது போன்ற 5 சட்டப் பிரிவுகளின் கீழ் நகரக் காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.