

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேச்சு நம்பகத்தன்மையற்றது என்பதால் அதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மற்றும் மீமிசலில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுக கூட்டணியில் எங்களுக்கும், மனித நேய மக்கள் கட்சிக்கும் தலா 5 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை வரவேற்கிறோம். இந்த இடங்களைத் தவிர திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதன் மூலம் தமிழகத்தில் சுமார் 24 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என நம்புகிறோம்.
தேமுதிகவிடம் திமுக பேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுவது நம்பகத்தன்மையற்றது. அவர், எதிலும் உறுதியில்லாமல் பேசக் கூடியவர். தன்னுடைய நிலையை அடிக்கடி மாற்றுவதால் அவரது பேச்சை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
திமுகவுக்கு ஏற்கெனவே 26 சதவீதம் வாக்குகள் உள்ளன. அதோடு, கூட்டணி கட்சிகளின் பலம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பிரச்சாரம் ஆகியவற்றால் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.