

தமிழகத்தில் விரிவாக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 31 நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டுகள் மறுவரையறை செய்வது தொடர்பாக மாநில மறுவரையறை ஆணையம் சார்பில் வரும் 20-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் சார்பில், தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 3 மாநகராட்சிகள், 28 நகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்வது தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் டிச.20 முதல் 5 நாட்களுக்கு நடக்க உள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல்1 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, தென்காசி மாவட்டம் சுரண்டை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகியநகராட்சிகளில் வார்டு மறுவரையறை தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடக்க உள்ளது.
அன்று மாலை 3.30 முதல் 5.30மணி வரை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகாசி மாநகராட்சி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடக்கிறது.
21-ம் தேதி காலை 11 முதல் 1 மணிவரை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லால்குடி, முசிறி, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய நகராட்சிகளில் வார்டுமறுவரையறை தொடர்பாக கருத்துகேட்புக் கூட்டம் நடக்க உள்ளது.
22-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை கோவை ஆட்சியர்அலுவலகத்தில் கூடலூர், காரமடை,கருமத்தம்பட்டி, மதுக்கரை, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி, சேலம் மாவட்டம் இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நகராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும்.
23-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை தாம்பரம் நகராட்சிஅலுவலக கூட்ட அரங்கில், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருநின்றவூர், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஆகிய நகராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து கருத்து கேட்கப்படுகிறது.
24-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை விழுப்புரம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நகராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்த கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டங்களில் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்கள் ஆட்சேபம், கருத்துகளை நேரடியாக தெரிவிக்கலாம். அதன் விவரங்களை மனுவாகவும் வழங்கலாம்.
இந்த கருத்துக் கேட்பு கூட்டங்களில் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவர் வெ.பழனிகுமார், உறுப்பினர் செயலர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.