

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடலையும் மாநிலப் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்திஉள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைமாநிலப் பாடலாக தமிழக அரசுஅறிவித்துள்ளதை பாஜக வரவேற்கிறது. சமீபத்தில், திருப்பரங்குன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்றார். ‘‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என சட்டரீதியான உத்தரவு இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், எனக்கு தமிழ் பிடிக்கும். நான் எப்போதும்போல எழுந்து நின்றுமரியாதை செய்வேன்’’ என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தமிழக அரசு, தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அறிவித்துள்ளது
1891-ல் சுந்தரம் பிள்ளை எழுதி வெளியிட்ட ‘மனோன்மணியம்' நாடகநூலில் ‘தமிழ்த் தெய்வ வணக்கம்'எனும் தலைப்பில் ‘நீராருங் கடலுடுத்தநிலமடந்தைக் கெழிலொழுகும்..’ என்ற பாடல் இடம்பெற்றது. இதை 1970 நவம்பர் 23-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார். பாடலில் சில வரிகளைத் தவிர்த்தது அப்போதே சர்ச்சையானது.
மனோன்மணியம் சுந்தரனார் இருந்திருந்தால், தான் எழுதிய பாடலுக்குகிடைத்த மாநில அரசின் அங்கீகாரத்தை நினைத்து மகிழ்ந்திருப்பார். ஆனால், சில வரிகளை நீக்கி, திருத்திபயன்படுத்துவதை ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டார். எனவே, அந்தபாடலை முழுமையாக பயன்படுத்துவதே, அவருக்கும், தமிழுக்கும், தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும்.