

கோவை: கோவையில் நடைபெற்ற தமிழக காவல் துறையினருக்கான தடகளப் போட்டியில் சென்னை பெருநகர காவல் துறை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழக காவல் துறையினருக்கான 61-வது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் 3 நாட்கள் நடைபெற்றன. சென்னை பெருநகர காவல் துறை,ஆயுதப்படை, வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம் உட்பட 7 அணிகளில் இருந்து மொத்தம் 450 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 100, 200, 400, 800, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், 400 மீட்டர் தொடர் ஓட்டம்,1600 மீட்டர் தொடர் ஓட்டம், ஈட்டிஎறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், தடை ஓட்டம், போல்வால்ட், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்
100 மீட்டர் ஓட்டத்தில் ஆயுதப்படை வீரர் சகாயராஜ் 10.5 விநாடிகளில் இலக்கை எட்டி தமிழக காவல் துறையின் அதிவேக ஓட்டவீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஆண்கள் பிரிவில் 210 புள்ளிகள் பெற்று ஆயுதப்படை அணி முதலிடத்தையும், 103 புள்ளிகள் பெற்று மேற்கு மண்டல காவல் துறை மற்றும் சென்னை பெருநகர காவல் துறை அணிகள் 2-ம் இடத்தையும் பெற்றன.
மகளிர் பிரிவில் 234 புள்ளிகள் பெற்ற சென்னை பெருநகர காவல் துறை அணி முதலிடத்தையும், 98 புள்ளிகள் பெற்று மேற்கு மண்டல காவல் துறை அணி 2-ம் இடத்தையும் பெற்றன.
இரு பாலர் பிரிவுகளிலும் சேர்த்து 337 புள்ளிகள் பெற்று சென்னை பெருநகர காவல் துறைஅணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. தனிநபர் அடிப்படையில் சிறந்த வீரராக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்ததினேஷ், மகளிர் பிரிவில் சென்னைபெருநகர காவல் துறையைச் சேர்ந்த உமாமகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக காவல் துறைதலைவர் சைலேந்திரபாபு நேற்றுபரிசுகளை வழங்கினார். ஆயுதப்படை கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.