

கும்பகோணம்: நெல்லையில் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இது தொடர்பாக கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதுதொடர்பாக, பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பள்ளியை ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எங்கெல்லாம் கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளதோ, அந்தப் பள்ளியின் கட்டிடத்துக்குள் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது என்று கண்டிப்பாக தெரிவித்திருந்தோம்.
இது, அனைத்து அரசு மற்றும்தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்தார்.