

கிணத்துக்கடவு அருகேயுள்ள கோதவாடி குளம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் முழு கொள்ளளவும் எட்டும் நிலையில் உள்ளது. இதனை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நேற்று பார்வையிட்டு, தனது கனவு நிறைவேறிவிட்டதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்துக்குட்பட்ட குருநல்லிபாளையம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் அமைந்துள்ளது. இக்குளம் கடந்த 1994-ம் ஆண்டு நிரம்பியது. அதன் பின்னர் 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி வருகிறது.
இதனை அறிந்த கோதவாடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நேற்று குடும்பத்துடன் சென்று குளத்தை பார்வையிட்டு, மலர்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் பொதுமக்களிடம் அவர், “நிலவில் தண்ணீரை கண்டுபிடித்தபோது, உங்கள் ஊர் குளத்தில் தண்ணீர் இல்லை, அதற்கான வழியை எப்போது கண்டு அறிவீர்கள்? என பலர் கேட்டனர். தற்போது குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதை காணும்போது எனது கனவு நிறைவேறி விட்டது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பின்னர், மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நான் பிறந்து வளர்ந்த கோதவாடி கிராமத்தில் உள்ள குளம் 27 ஆண்டுகளாக வறண்டு கிடந்தது. தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து கடின உழைப்பின் பலனாக இன்று குளம் நிரம்பி உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தி உள்ளனர். ஆண்டு முழுவதும் இந்த குளத்தில் நீர் நிரம்பி இருக்க எடுக்கும் முயற்சிகளில் எனது பங்களிப்பும் இருக்கும். இதனை முன் உதாரணமாக கொண்டு பல கிராமங்களில் நீராதாரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். நிலவில் நீர் கண்டுபிடித்ததை விட, எனது சொந்த கிராமத்தில் உள்ள குளத்தில் தண்ணீரை காண வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.