

சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஜெனரல் பிபின் ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிடர், குரூப் கேப்டன் வருண்சிங் ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கல்வியியல் துறையில் எம்.பில். பட்டம் பெற்றவர்கள்.
இந்நிலையில், பல்கலைக்கழக பாதுகாப்பு கல்வியியல் துறை சார்பில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
உயிரிழந்த 14 பேரின் படங்களுக்கு துணைவேந்தர் எஸ்.கவுரி, பதிவாளர் என்.மதிவாணன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் ஆகியோர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடந்த இரங்கல் கூட்டத்தில் துணைவேந்தர் கவுரி பேசியதாவது:
இந்திய ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமென கனவு கண்டவர் பிபின் ராவத். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்துக்கு இணையாக, தொழில்நுட்ப ரீதியில் இந்திய ராணுவத்தை மேம்படுத்த விரும்பினார்.
அவரது பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் ஏற்படுத்தலாம் என்று ராணுவ அதிகாரி ஒருவர் யோசனை தெரிவித்தார். அந்த யோசனையைப் பரிசீலித்து, மேம்பாட்டு மையம் அமைக்கத் திட்டமிடப்படும். இவ்வாறு துணைவேந்தர் பேசினார்.
மெட்ராஸ் ரெஜிமென்டைச் சேர்ந்த கர்னல் பிரதீப் குமார் பேசும்போது, ``இந்திய ராணுவத்தை எதிர்கால சூழலுக்குத் தயார்படுத்தியவர் பிபின் ராவத்'' என்றார். பாரா கமாண்டோ படை லெப். கர்னல் வெங்கடேஷ் பேசும்போது, ``போரில் கமாண்டோ படையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, பணியில் சேர்க்கப்படுகிறார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் 2 பேர் இளம் கமாண்டோ வீரர்கள்'' என்றார்.
பல்கலை. பாதுகாப்பு கல்வியியல் துறைத் தலைவர் உத்தம் குமார் ஜமதக்னி அறிமுக உரையாற்றினார். இரங்கல் கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.