

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூகநலத் துறை அலுவலகத்தில், திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
சமூகநலத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருநங்கைகள் நலனுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், அமைச்சர் பி.கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழில் தொடங்குவதற்கு திருநங்கைகள் உதவி கேட்டுள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து, உரிய முடிவு எடுக்கப்படும்.
திமுக ஆட்சியில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. சாதரண கட்டணப் பேருந்தில் இதுவரை 3.15 லட்சம் திருநங்கைகள் இலவசமாகப் பயணம் செய்துள்ளனர்.
காவலர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் திருநங்கைகள் சேர ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்கள் களையப்படும். கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சமூகநலத் துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.