

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிஅமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்சியின் மாவட்ட மாநாடு நேற்றும், நேற்று முன்தினமும் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மாவட்டச் செயலர் சி.சங்கர் தலைமை தாங்கினார். மத்தியக் குழுஉறுப்பினர் அ.சவுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் இ.முத்துக்குமார், கே.நேரு பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் இணை ரயில்பாதை அமைக்க வேண்டும்.
கரோனா பொது முடக்கத்தின் போதுநிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும். சுற்றுவட்டப் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து அ.சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தொழில் நிறுனங்களில் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுகிறது. அதை போராடி தடுத்து நிறுத்தியுள்ளோம். நிரந்த தொழிலாளர்களுக்கு ஒரு விதமான உணவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு விதமான உணவும் வழங்கக் கூடாது. உணவு விஷயத்தில்அனைவரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. மூடப்படும் தொழிற் சாலைகளை புதிதாக வேறு பெயரில்தொடங்கும்போது ஏற்கெனவேபணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தற்போது கூட செங்கல்பட்டு மாவட்டத்தில் ஃபோர்டுகார் நிறுவனம் மூடப்பட உள்ளது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பர். இந்த தொழில்நிறுவனத்தை மூட அரசு அனுமதிக்கக் கூடாது. தொடர்ந்து இயங்க தேவையான உதவிகளை அளிக்கலாம் என்றார்.