அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு பகுதியில் நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  (அடுத்த படம்) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு பகுதியில் நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (அடுத்த படம்) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

காஞ்சி/செங்கை/ திருவள்ளூர்: தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அதிமுக மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

பொங்கல் பரிசு

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்கள் இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு அளிக்க வேண்டும், பொங்கல் பரிசுத் தொகை அளிக்க வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

செங்கல்பட்டு பகுதியில், செங்கல்பட்டு மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, சென்னை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக மகளிர் அணிச்செயலரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர்கள் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், கே.பி.கந்தன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல், அதிமுக வர்த்தக அணி செயலர் வி.என்.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் கிழக்குமாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி, மேற்கு மாவட்டச் செயலாளர் பி.வி.ரமணா, வடக்கு மாவட்டச் செயலாளர்பி.பலராமன், தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், மத்திய மாவட்டச் செயலாளர் பா.பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் அப்துல்ரஹீம், முன்னாள் எம்பிக்கள் வேணுகோபால், கோ.ஹரி, முன்னாள் எம்எல்ஏக்கள் விஜயகுமார், மணிமாறன், பொன்.ராஜா உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in