

சென்னை: சென்னையில் மனோகர் என்பவரின் மளிகை மொத்த வியாபாரக் கடையில் விற்பனை செய்யப்பட்ட மல்லிப் பொடித் தூளில் ரசாயனக் கலவை அதிகமாக கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிஉணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடந்த 2015-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதை எதிர்த்து மனோகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், “உணவு பாதுகாப்புத் துறைதாக்கல் செய்துள்ள அறிக்கையில் சென்னை மாநகர எல்லையைப் பொறுத்தமட்டில் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், 580 புகார்கள் ஆய்வில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களில் கலப்படம் என்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. உணவில் கலப்படம் செய்வதைத் தடுக்க தனியாக துறை அமைக்கப்பட்டுள்ளபோதும், கலப்படம் என்பது அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. உணவு கலப்படத்தைத் தடுக்க மாதிரிகள் சேகரித்து ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது. கலப்படம் செய்பவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல உணவு கலப்படத்தைத் தடுக்க, பொதுமக்கள் மத்தியிலும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உணவு கலப்படம் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க ஏதுவாக கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்-ஆப் அல்லது புகார் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பொதுமக்களின் பார்வையில் படும்படி ஒட்ட வேண்டும்.
மேலும் உணவு கலப்படம் தொடர்பான புகாருக்கு வெறும் அபராதம் மட்டும் விதிக்காமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீதும் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.