

சென்னை: பள்ளி பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணிகள் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், தங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு புத்தகம் அச்சிடுவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் சி.எஸ்.மோசஸ், செயலர் வி.பிரேம் குமார் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், வினா வங்கி, இதர கையேடுகள் என ஆண்டு தோறும் சுமார் 8 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன.
வழக்கமாக புத்தக அச்சிடுதல் பணிகள் தமிழகத்தைச் சேர்ந்த அச்சகங்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு 50 சதவீதத்துக்கும் மேலான புத்தக அச்சிடுதல் பணி ஆந்திரா உட்படவெளிமாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகப் பாடப்புத்தகங்களை வெளிமாநிலங்களில் கொடுத்து அச்சடிப்பதன் மூலமாக போக்குவரத்து செலவு பலமடங்கு அதிகரிக்கிறது. இதனால் அரசுக்கு ரூ.6 கோடி முதல் 7 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.
துறைசார்ந்த சில உயர் அதிகாரிகள் தங்களின் தங்களின் சுயலாபத்துக்காக தவறான தகவல்களை அரசுக்கு தெரிவித்து,புத்தகம் அச்சிடும் பணிகளை அண்டைமாநிலங்களுக்கு மடைமாற்றி வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி பாடநூல் அச்சிடும் பணியை உள்ளூர் அச்சகங்களுக்கு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். போக்குவரத்து செலவின கட்டண அமைப்பையும் திருத்தியமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.