

சிவகாசியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகம் முன் விருதுநகர் மாவட்ட பட்டாசு - தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். சிஐடியூ செயலாளர் தேவா, பொதுச் செயலாளர் மகாலட்சுமி, பொரு ளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் விதிமுறைகளி லிருந்து பட்டாசுத் தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் பயன்படுத்துவதற்கான தடையை நீக்க வேண்டும். சரவெடி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும். பட்டாசு ஆலைகள் அனைத்தையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர், சிவகாசியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை இணை அலுவலர் தியாக ராஜனிடம் மனு அளித்தனர்.