Published : 04 Jun 2014 08:53 AM
Last Updated : 04 Jun 2014 08:53 AM

பாதிரியார் கடத்தல்: இந்தியாவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்?

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட கொடைக்கானல் கிறிஸ்தவ பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார், போரினால் பாதிக்கப்பட்ட அகதிகள் மறுவாழ்வுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வாரியன்வயலைச் சேர்ந்த அலெக்சிஸ் பிரேம்குமார் (47), கொடைக்கானல் செண்ப கனூர் கத்தோலிக்க இறையியல் கல்லூரியில் குருகுல படிப்பை முடித்தார். தீவிரவாதத்தால் ஏற்படும் பாதிப்பை அறிந்த அவர், தீவிரவாதத்துக்கு எதிராக விழிப் புணர்வு செய்வது, தீவிரவாதக் குழுவில் இளைஞர்கள் சேர்வதைத் தடுப்பது, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், குழந்தை களுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்து அவர்களுக்கு கல்வி வழங்குவது ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

இதற்காக, குருகுல படிப்பு முடித்தவுடன் இத்தாலியின் ரோம் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜேசு சபை புலம்பெயர்ந்தோர் அமைப்பு (ஜேஆர்சி) என்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, அதன் இயக்குநராக திண்டுக்கல் பெஸ்கி குருகுல இல்லத்தில் தங்கி 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

ஆப்கனில் துணிச்சலான சேவை

ஜேஆர்சி தொண்டு நிறுவனம் சார்பில் 2012-ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானின் ஹெர்ட் நகரில் தங்கியிருந்து தீவிரவாத போரினால் பாதிக்கப் பட்ட கிராமங்களில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவரது தலைமையிலான ஆசிரியர்கள் குழு போரினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தங்கி, அந்தக் கிராம குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வழங்குவது, அரசுப் பள்ளிகளை கொண்டு வருவது, அரசு மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைக்கச் செய்து அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, போரினால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பயங்கரவாத குழுவில் சேர்வதைத் தடுக்க விழிப்புணர்வு செய்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களது சமூகப் பணியால் ஆப்கானிஸ்தான் பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப ஆர்வம் காட்டினர். இவரது சமூகச் சிந்தனை கருத்தால் ஈர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இளைஞர்கள், தீவிரவாத சிந்தனையைக் கைவிட்டு வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ் தானின் ஷதாத் என்ற கிராமத்தில் ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத தீவிரவாத கும்பல் அங்கிருந்த ஆசிரியர்கள், குழந்தைகளை விட்டுவிட்டு பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மட்டும் கடத்திச் சென்றனர். அதன்பிறகு அவரிடம் இருந்தோ, அவரை கடத்திச் சென்ற தீவிரவாதிகளிடமிருந்தோ எந்தத் தகவலும் இல்லை. அதேவேளையில், ஆப்கானிஸ் தானைச் சேர்ந்த எந்த தீவிரவாத குழுவும் இதுவரை பொறுப் பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் குழுவில் இளைஞர்கள் சேருவதைத் தடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தேவையான நடவடிக்கை எடுத்ததால்தான், பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை தீவிரவாதிகள் கடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு மிரட்டலா?

மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் பங்கேற்றார். அவருடன் பிரதமர் மோடி பேசியபோது, ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை தடுத்து அமைதி திரும்ப இந்தியா ஒத்துழைக்கும் என உறுதியளித்தார். எனவே, இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கவே அலெக்சிஸ் பிரேம்குமாரை ஆப்கன் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிற நாடுகளில் சேவையாற்றும் பாதிரியார்கள் கலக்கம்

திண்டுக்கல் பெஸ்கி குருகுல இல்லத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநரான பாதிரியார் டோமினிக் கூறியது:

எங்கள் தொண்டு நிறுவனம் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இடம்பெயர்ந்த, விரட்டி யடிக்கப்பட்ட, உள்நாடுகளில் அகதிகளாக வாழும் மக்களுக்கு கல்வி, மருத்துவம் ஆகிய உதவிகள் கிடைக்கச் செய்து, அவர்களின் மறுவாழ்வுக்கு சேவை செய்து வருகிறது. 50 நாடுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தெற்காசியாவில் ஆப்கானிஸ் தான், இலங்கை, பூடான், மியான்மர், பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளில் சேவை செய்வதற்காக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் சென்றார். 2011-ல் இலங்கையில் சில காலம் தங்கி போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்குப் பாடுபட்ட இவர், 2012 முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தங்கி சேவை செய்து வந்தார். இந்த நிலையில், அலெக்சிஸ் பிரேம்குமாரை தீவிரவாதிகள் கடத்தியிருப்பது வேதனைக்குரியது. இந்தக் கடத்தல் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மற்ற பாதிரியாளர்களையும் அச்ச மடைய வைத்துள்ளது என்றார்.

துணிச்சலுடன் விரும்பிச் சென்றார்

திண்டுக்கல்லில் இருந்தபோது ஜேஆர்சி தொண்டு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகிகள் வந்து, ஆப்கானிஸ்தானுக்குச் சென்று சேவையாற்ற யார் விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, பலரும் தயங்கி நிற்க அலெக்சிஸ் பிரேம்குமார் தாமாகவே முன்வந்து ஆப்கானிஸ்தானுக்குச் சென்றாராம்.

சமூகப் பணியே பிரதானம்

குருகுல பட்டம் முடித்தவர்களில் பெரும்பாலானோர் இறைப் பணியைத்தான் தேர்ந்தெடுப்பர். ஆனால், அலெக்சிஸ் பிரேம் குமாரோ சமூகப் பணியை தேர்ந்தெடுத்து அதற்காக ஜேஆர்சி தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் மக்களோடு மக்களாக தங்கியிருந்து, முகாம்வாசிகளின் மறுவாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உதவித் தொகைகள் கிடைக்க உதவி செய்தார்.

சிறு வயதிலேயே வெளிப்பட்ட சமூகப் பணி

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக பள்ளிப் பருவம் தொட்டே அலெக்சிஸ் பிரேம்குமாருக்கு சமூகப் பணி மீது தனியாக தாகம் இருந்தது. தேவக்கோட்டை தி பிரிட்டோ பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தபோது, ஆசிரியரின் கேள்விக்கு பதிலளிக்கையில், சமூகப்பணியே தனது லட்சியம் என்றாராம். அதைக் கேட்டு சக நண்பர்கள் அவரை கேலி செய்து சிரித்தனராம். ஆனால், அவரோ தனது லட்சியத்தில் உறுதியாக இருந்து சாதித்துக் காட்டியுள்ளார்.

பிளஸ் 2 முடித்து, கொடைக்கானல் செண்பகனூர் இறையியல் கல்லூரியில் குருகுல பட்டம் படித்தபோது, அடிக்கடி மலைக் கிராமங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மலைக் கிராம மக்கள் கல்வியறிவு இன்றி படும் கஷ்டத்தைக் கண்டு கலங்கிய அலெக்சிஸ், அடித்தட்டு மக்களின் மறுவாழ்வுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க அங்கேயே முடிவு செய்தார்.

சோகத்தில் ஆழ்ந்த மலைக் கிராமம்

குருகுல பட்டம் பெற்ற பிறகு 2002 முதல் சில ஆண்டுகள் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் கொடைக்கானல் சென்பகனூரில் தங்கியிருந்து 25-க்கும் அதிகமான பழங்குடியின கிராம மக்களின் மறுவாழ்வுக்காக பாடுபட்டார். குறிப்பாக, புதுபுத்தூர் பலியர்கள் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் குடிசை, மர வீடுகள் வைத்திருந்தவர்களுக்கு அரசின் தொகுப்பு வீடுகள் வாங்கிக் கொடுத்தார். பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி வழங்கி பள்ளிகளிலும் சேர்த்துள்ளார்.

பிரேம்குமார் கடத்தப்பட்ட தகவல் அறிந்து, அந்தக் கிராம மக்களும் சோகத்தில் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.

சிறப்புப் பிரார்த்தனை

பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் பாதுகாப்பாக மீண்டு வர வேண்டும் என்று திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் செவ்வாய்க்கிழமை சிறப்புப் பிரார்த்தனை நடத்தப் பட்டது.

இதேபோல, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிகளில் அலெக்சிஸ் பிரேம் குமார் பத்திரமாக திரும்பி வரும் வரை தினமும் பிரார்த்தனை செய்யுமாறு கத்தோலிக்க நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x