

தமிழகத்தில் ஒமைக்ரான் ஊடுருவி யதை தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா சிறப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் இருப்பதாக தலைமை மருத்துவர் குமரவேல் தெரிவித்தார்.
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’ உறுதி செய்யப்பட்டது. அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த ஒரு பெண் ணுக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் கரோனா சிறப்பு வார்டு கூடுதல் படுக்கை வசதிகளுடன் தயார் படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி, தீவிர சிகிச்சை பிரிவுகள், வென்டிலேட்டர் வசதி, மருத்துவப் பணியாளர்கள் என அனைத்து வசதி களும் மீண்டும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம், திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவர் குமரவேல் கூறியதாவது, ‘‘திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் ஏற்கெனவே 400 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது ஒமைக்ரான் தொற்றால் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 165 படுக்கை வசதிகளும், தீவிர சிகிச்சைப்பிரிவுகள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பும் நிலையில் உள்ளனர்’’ என்றார்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் தினசரி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இன்னும் 3 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளன. 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்புகளில் இருந்து எளிதாக தப்பிக்கலாம். இதுவே ஒமைக்ரான் போன்ற வேகமாக பரவக்கூடிய தொற்றில் இருந்து பொதுமக்களை காக்கும் ஆயுதமாகும்’’ என்றார்.