

சென்னை: திருநெல்வேலியில் மாணவர்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த பழுதடைந்த கட்டிடத்தைச் சீரமைக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நெல்லை பொருட்காட்சி திடல் அருகே உள்ள 100 ஆண்டுகள் பழமையான பள்ளியின் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
நெல்லை பள்ளி விபத்தில் பலியான 3 மாணவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:
''திருநெல்வேலி நகரில் உள்ள ஷாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன், விஸ்வ ரஞ்சன் மற்றும் சுதீஸ் என மூன்று மாணவர்கள் மரணமடைந்துள்ளனர்.
மற்ற நான்கு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்.
கோவிட்-19 முடக்கக் காலத்தில் கூட கல்விக் கட்டணத்தைக் கட்டாயப்படுத்தி வசூலிப்பதில் பிடிவாதம் காட்டிய தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக அக்கறை காட்டாததுதான் விபத்துக்கும், உயிரிழப்புக்கும் முக்கியக் காரணமாகின்றன.
இந்த விபத்தில் இறந்துபோன மாணவர்கள் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு கொடுத்து உதவ வேண்டும். படுகாயம் அடைந்த மாணவர்களுக்கு முழுமையான மருத்துவ உதவி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பழுதடைந்த கட்டிடத்தைச் சீரமைக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, குறைகளைக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்வதுடன் விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. குழந்தைகளை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது''.
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.