

மதுரை: ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கக் கோரி போராட்டம் நடத்தியதாக ஸ்டெர்லைட் பணியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கக் கோரி ஆலைப் பணியாளர்கள் மற்றும் புதியம்புதூர் மற்றும் சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜூலை 27-ல் ஆலை முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துணைத் தலைவர் சுமதி உட்பட பலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''இந்தியாவில் கரோனா 2-ம் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இதனால் கரோனா 3-வது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கக் கோரி ஆலைப் பணியாளர்கள் மற்றும் புதியம்புதூர் மற்றும் சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜூலை 27-ல் ஆலை முன்பு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் மீது சிப்காட், புதியம்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இவர்கள் ஆலை முன்பு போராட்டம் நடத்தினர். எனவே வழக்கு விசாரணைக்குத் தடை விதித்தும், வழக்கை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனப் போராட்டம் நடத்திய பணியாளர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த உத்தரவு இந்த மனுத்தாக்கல் செய்தவர்களுக்கு மட்டும் இல்லாமல், வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் பொருந்தும்'' என உத்தரவிட்டார்.