

சென்னை: வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு செவிசாய்த்து, பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு செவி சாய்த்து, பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற பெரும் முதலாளிகள் பல்லாயிரம் கோடிகள் கடனை வைத்துக்கொண்டு நாட்டை விட்டே ஓடிப்போனார்கள். மறுபுறத்தில், திட்டமிட்டுக் கடன்களைச் செலுத்த மறுத்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனில் பெரும்பகுதி தள்ளுபடி செய்யப்பட்டது. கடனைத் திரும்பச் செலுத்தாத 13 நிறுவனங்களின் சொத்துகளைத் தனக்கு வேண்டப்பட்ட முதலாளிகளுக்கு, குறைவான தொகையில் கைமாற்றி விட்டது மோடி அரசு.
குறிப்பாக, கடந்த ஏழாண்டுகளில் மட்டும் ரூ.10.72 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த வாராக்கடனில் சுமார் 75 விழுக்காடு கடன்கள் பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன்களாகும். இவ்வாறு தள்ளுபடி செய்யப்படும் கடன்களில் பயனடைந்தவர்களில் பெரும்பாலானோர் கார்ப்பரேட் முதலாளிகளே.
சாதாரண விவசாயக் கடன், கல்விக் கடன்களுக்கே கெடுபிடி காட்டும் வங்கிகள், வாராக்கடனைத் தடுக்கவோ, குறைக்கவோ முன்வருவதில்லை. இதுவரை பெரும் முதலாளிகளுக்குக் கடனைத் தள்ளுபடி செய்துவந்த மோடி அரசு, பொதுத்துறை வங்கிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களிடமே ஒப்படைக்க நினைக்கிறது.
இதற்காக, தற்போது நாடாளுமன்றத்தில் வங்கிகள் தனியார் மய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதா தற்போது உள்ள 51 விழுக்காடு பங்குகளையும் தனியார் மயமாக்குவதற்கு வழிவகுக்கும். இதன் வாயிலாக, நாட்டு மக்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணம், பெருமுதலாளிகளால் சூறையாடப்படுக்கூடிய அபாயம் உள்ளது.
இச்சூழலில்தான், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். தனியார் மய மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு செவிசாய்த்து, பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.