வேடந்தாங்கல் சரணாலயம் சுற்றளவு குறைப்புத் திட்டம் வாபஸால் மகிழ்ச்சி: அன்புமணி ராமதாஸ்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: வேடந்தாங்கல் சரணாலயம் சுற்றளவு குறைப்புத் திட்டத்தைத் தமிழக அரசு கைவிடுவதாக வெளியான அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் சரணாலயம், பருவநிலை மாறுபாட்டிற்கேற்ப பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாக உள்ளது.

இந்த நிலையில் வேடந்தாங்கல் சரணாலயம் அருகே இயங்கி வரும் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றின் விரிவாக்கத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை 5 கி.மீ. ரேடியஸ் சுற்றளவில் இருந்து 3 கி.மீ. சுற்றளவாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக 2020-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்துக்கு அரசு உதவவில்லை என வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், பறவைகள் சரணாலயப் பரப்பளவைக் குறைக்கும் முடிவை வாபஸ் பெறுவதாகத் தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 5 கி.மீ.லிருந்து 3 கி.மீ.ஆகக் குறைக்கும் முடிவு கைவிடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சரணாலயத்தைக் காக்கும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது; இது வரவேற்கத்தக்கது!

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சரணாலயச் சுற்றளவைக் குறைக்கும் முயற்சிகள் தொடங்கியபோது அதைக் கைவிட வேண்டும் என்று வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்ந்து கடிதங்களை எழுதினேன். அந்த முயற்சிகளுக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in