Published : 17 Dec 2021 10:29 AM
Last Updated : 17 Dec 2021 10:29 AM

அடுத்தடுத்து சிறுமிகள் மர்மக் கொலை; பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் அடுத்தடுத்து சிறுமிகள் மர்மமான முறையில் கொலையாகும் நிலையில், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாச்சலூரிலும், கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகிலும் அடுத்தடுத்து இரு பெண் பிஞ்சுகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

பாச்சலூர் மாணவி கொலைக்கு காரணமான சதிகாரர்கள் இதுவரை கைது செய்யப்படாதது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலை அடுத்த பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்நாள் பிற்பகலில் பள்ளிக் கட்டிடத்திற்கு பின்புறத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அக்குழந்தையை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அந்த பெண் பிஞ்சு உயிரிழந்துவிட்டது.

அதேபோல், கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே கடந்த 11-ஆம் தேதி காணாமல் போன 15 வயது சிறுமி, ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று யமுனா நகரில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறாள். வாழ வேண்டிய இரு பிஞ்சுகளின் படுகொலைகள் நெஞ்சத்தை உருக்குகின்றன.

இந்த இரு கொலைகளும் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பாச்சலூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது குழந்தையின் சாவுக்கு பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் காலை 11 மணிக்கு, மதிய உணவுக்கு முந்தைய இடைவேளையின் போது வகுப்பை விட்டுச் சென்ற அந்தக் குழந்தை, இடைவேளை முடிந்த பிறகும் வகுப்புக்குத் திரும்பவில்லை. ஆனால், அதை ஆசிரியர்கள் அறியவில்லை. மதிய உணவு இடைவேளையின் போது அந்தக் குழந்தையை அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் அதன் அக்கா பள்ளி முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தும் கூட, காணாமல் போன குழந்தையை தேட அவர்கள் முயற்சிக்கவில்லை.

அதன்பின்னர், மூத்தக் குழந்தை வீட்டுக்குச் சென்று பெற்றோரை அழைத்து வந்திருக்கிறாள். அவர்கள் தான் பள்ளிக்கட்டிடத்திற்கு பின்னால் பாதி எரிந்த நிலையில் குழந்தையை கண்டெடுத்திருக்கிறார்கள். அக்குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குக் கூட பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் சுமார் 50 லட்சம் மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். நம்பி வரும் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பை அரசு பள்ளிகளால் தர முடியவில்லை என்றால், அதைவிட மிகக்கொடிய கடமை தவறுதல் எதுவும் இருக்க முடியாது.

இந்த அவலத்தை போக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாச்சலூர் பள்ளிக்குழந்தை கொலை செய்யப்பட்டு இரு நாட்களாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. கோவை மாணவி காணாமல் போய் ஐந்து நாட்களாகியும் காவல்துறை கண்டுபிடிக்கத் தவறியதால் தான் அக்குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள்.
கோவை மாணவியை அவரது குடும்ப நண்பரே பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருக்கிறார். மாணவி காணாமல் போனதாக புகார் வந்த போதே காவல்துறை விசாரணையை தொடங்கியிருந்தால் குற்றவாளியை பிடித்து மாணவியை மீட்டிருக்கலாம்.

குற்றங்கள் நடந்த பின் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிப்பது ஒரு வகையான கடமை என்றால், அத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுப்பது அதைவிட முதன்மையாக கடமை ஆகும். சிறிய குற்றம் செய்தால் கூட காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முடியாது என்ற உணர்வு சமூகத்தில் இருந்தாலே குற்றங்கள் குறைந்து விடும்.

ஆனால், அத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதில் காவல்துறை தவறுகிறதோ? என்ற ஐயத்தையும், கவலையையும் அண்மைக்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஏற்படுத்துகின்றன.

பாச்சலூரில் குழந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்காத காவல்துறையினர், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெற்றோரையும், பொதுமக்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இப்போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.

அண்மைக்காலங்களில் மாணவிகள் உள்ளிட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுதல், அதைத் தாங்கிக் கொள்ள முடியாத மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளுதல், பெண் குழந்தைகள் மர்மமாகக் கொல்லப்படுதல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

பெண் குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழ்ச் சமூகத்திற்கு அத்தகைய நிலை ஏற்படக்கூடாது.

பாச்சலூர் பள்ளி மாணவி, கோவை குழந்தை ஆகியோர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் விரைந்து கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எந்தவித சமரசமும், அலட்சியமும் காட்டக் கூடாது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x