Published : 17 Dec 2021 03:05 AM
Last Updated : 17 Dec 2021 03:05 AM

இந்து குழும தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மைய விருது

சென்னை: இந்து குழுமத்தின் தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி மையத்தின் முன்னாள் மாணவியான இவர், இதழியல் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காக 2022-ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையம் மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் ஆண்டுதோறும் இவ்விருதுவழங்கப்படுகிறது. இந்த மையத்தில் பயின்று, இதழியல் துறையில் சிறப்பாக செயல்படுவோரைக் கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.

143 ஆண்டு பாரம்பரியம் மிக்க `தி இந்து’ குழுமத்திலிருந்து தினசரிகள் மற்றும் மாதமிருமுறை இதழ் ஆகியன வெளியாகின்றன. இக்குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் மாலினி பார்த்தசாரதி உள்ளார். ‘இந்து குழும'த்தின் செய்தி உள்ளடக்கங்களை டிஜிட்டல் பரிமாணத்துக்கும் வேகமாக மாறச் செய்வதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத் தக்கது என்றுகொலம்பியா ஜர்னலிசம் கல்விமைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பொறுப்பேற்பதற்கு முன்பு `தி இந்து’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் நிர்வாக ஆசிரியர் ஆகிய பொறுப்புகளையும் அவர்திறம்பட நிர்வகித்ததையும் குறிப்பிட்டுள்ளது. இந்த கல்வி மையத்தில் 1982-ம் ஆண்டு இதழியல் படிப்பை படித்தவர் மாலினி பார்த்தசாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து நாளிதழின் மும்பை பதிப்பை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலின் முக்கியமான நிகழ்வுகளை இவர் பல்வேறு செய்திக் கட்டுரைகள், தலையங்கம் மூலம் பதிவிட்டுள்ளார்.

``அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான இந்து மையத்தை'’ உருவாக்கியவர் என்றும் இது சுய அதிகாரம் பொருந்திய நம்பகத்தன்மை வாய்ந்த அறிவுசார் ஆலோசனை மையமாகத் திகழ்கிறது என்றும் இது பொதுக்கொள்கை வகுப்பது, புதிய சிந்தனைகள் உருவாக்கத்துக்கு களமாக அமைந்துள்ளது என்றும் மாலினி பார்த்தசாரதி குறித்து கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையம் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது.

மாலினி பார்த்தசாரதி இதழியல்துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக ``பர்ஸ்ட் பேங்க் ஆப்இந்தியா'’ 1997-ம் ஆண்டு விருதைப் பெற்றார். 2000-வது ஆண்டில் ஹல்டிகாட்டி விருதைப் பெற்றுள்ளார்.

``எனது பத்திரிகை உலக வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று. இத்துறையில் எதிர்கொண்ட சவால்கள் சிரமங்களுக்கு இவ்விருது மூலம் கிடைத்த அங்கீகாரம் அர்த்தம் சேர்க்கிறது’’ என்று தனது ட்விட்டர் பதிவில் மாலினி பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x